
என் பள்ளிப் பருவ
நண்பனான நீ
என்னைப் பார்க்க
வந்திருக்கிறாய்
சம்பிராதயமான நம்
பேச்சுக்களுக்குப்பின்
‘நீ எப்படி
இப்படி மாறினாய் ?
உன் பழைய
புன்னகை எங்கே?
ஏன் எப்போதும்
இறுக்கத்துடனும்
சிடுசிடுவென்றும்
இருக்கிறாய் ?’
என வினவுகிறாய்
என் உயிர்
நண்பன்
உன்னிடம்
சொல்வதற்க்கென்ன
கேள் !
ஆம் !
சிறுவயதில்
எதற்கெடுத்தாலும்
சிரித்தவள் தான்
நான்
“ஏண்டி ! இப்படி
கெக்கே பிக்கே-ன்னு
சிரிக்கற” என்று
கேட்கும்
அப்பத்தாவையும்
கேலி செய்து
சிரித்தவள் தான்
ஆனால்
என் வயதுப்
பிராயத்தின்
ஆரம்பத்தில்
அதன் விளைவுகள்
வேறு மாதிரியாக
இருந்தது
நீ அழகாயிருக்கிறாய்
என்றும்
உன் சிரிப்பு
அழகாயிருக்கிறது
எனவும்
நிறைய நண்பர்கள்
அறிமுகமானார்கள்
என்னுடன்
அவர்களுடன்
அழையாத
விருந்தாளியானது
காதலும் !
சிலர் நட்பென்று
சொல்லி
காதலெனவும்
சிலர் முதலிலேயே
காதலெனவும்
முடித்தார்கள்
சிலர் மென்மையாகவும்
சிலர் கையறுத்துக்
கொள்வேனெனவும்
தற்கொலை
செய்வேனெனவும்
வன்மையாகவும் !
சிலர் நான்
ஒரு பெண்ணென்று
மறந்தும்,சிலர்
அதுவே என்
பலவீனம்
என்றறிந்தும்
மிரட்டுதலாலும்
கட்டாயப்படுத்துதலாலும்
காதலைச் சொல்லிப்
பின்
என் சம்மதம்
கிடைக்காத பொழுது
எதிரிகளாகவும்
நண்பர்களாவும்
பிரிந்தார்கள்
நண்பனாய்ப்
இருந்தவன்
உன்னுடன்
இருந்தால்
உன் நினைவெனைக்
கொல்லும் என்று
பிரிந்தான்
எதிரியாய்ப்
ஆனவன்
உன்னை நிம்மதியாய்
வாழ விடமாட்டேன்
என்று சவாலுடன்
பிரிந்தான்
மொத்தத்தில்
எவரும்
இல்லை
இப்போது
என் அருகில் !
நீயே சொல் !
நான் செய்த
பிழை தான்
என்ன ?
நட்புடன்
பழகுவதும்
புன்னகைப்பதும்
எனது
குணமாயிருக்கையில்!
எப்படி காதலிக்க
முடியும் என்னால் ?
நடுத்தர குடும்பப்
பின்னணியில்
பிறந்தவளும்
பெற்றோரின்
வார்த்தைக்கு
மதிப்புக்
கொடுப்பவளுமான
எனக்கு
காதல் எனில்
கைக்கெட்டாததாய்
இருக்கையில் !
அப்படியே
காதலித்தாலும்
எத்தனை பேரை
காதலிக்க முடியும்
என்னால் !
பெண்ணென்றால்
இப்படித்தான்
என்கிறார்கள்
என்னால் ஏனோ
இதை இயல்பென
ஏற்றுக்கொள்ள
முடியவில்லை
என் மீது எனக்கே
வெறுப்பு வருகிறது
சில
நேரங்களில்
பெண்ணென
பிறந்தற்காக
இத்தனையும்
எதனால் ?
நான் சிரிக்கும்
அந்த ஒற்றைச்
சிரிப்பால் தானே
அதனால் தான்
நிறுத்தி விட்டேன்
அதை !
இப்போது
எனக்காக
கூட சிரிப்பதில்லை
நான் !
சொல் !
இன்னுமா
சிரித்திரு
என்கிறாய்
என்னை?
************
1 comments:
sirippukku pinnaal ivalavu sinthanai. karuththu arumai. entha aanukkum innilamai illai, enenil avan ellariyum kathalikeraan ellarukkum thiriyaamal.
Post a Comment